Wednesday, August 22, 2012

கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை.

Posted by Kattankudi Web Community (KWC) on 12/06/2012
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஸகசதுல்ல ஜதூரோஸ். ஜதுரோஸுக்கு வயது 60. இப்போது புத்தளம் வாசி.
ஆனால், அவருடைய நினைவும் கனவும் யாழ்ப்பாணத்தில்தான். 1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அறிவிப்பை அடுத்து வெளியேறியவர்களில் ஸகசதுல்ல ஜதூரோஸின் குடும்பமும் ஒன்று.
நீண்டகால அகதி வாழ்க்கை – பின்னர் புத்தளத்திலேயே காணி, வீடு என்று நிரந்தர வாழ்க்கைக்கு மாறி, புத்தளம் வாசியாகிவிட்டார் ஸகசதுல்ல ஜதூரோஸ். 
20 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்துக்கு வெளியே வசித்து வரும் ஸகசதுல்ல ஜதூரோஸ் யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரத்துக்காக வந்து செல்கிறார். அவருடன் கூடவே அவருடைய பிள்ளைகளும் வந்து செல்கிறார்கள்.
நடமாடும் வியாபாரியாகத் தொழில் செய்துவரும் ஸகசதுல்ல ஸதூரோஸையும் அவருடைய பிள்ளைகளையும் சந்தித்து உரையாடினேன்.
  • 1. நீண்டகாலத்துக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறீங்கள் -  யாழ்ப்பாண நிலைமைகள் எப்படியிருக்கு? யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகவே வருவதற்கு முயற்சிக்கவில்லையா?
யாழ்ப்பாணத்துக்கு வரும்போது எனக்கு ஏற்படும் சந்தோசத்தைச் சொல்லவே முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி. நெஞ்சு நிரம்பச் சந்தோசம். நான் பிறந்து வளந்த ஊர் அல்லவா! சொந்த ஊருக்கு வரும்போது யாருக்குத்தான் மகிழ்ச்சி வராது, சொல்லுங்க. எத்தனை வயசானாலும் சொந்த ஊர் எண்டால் அது சந்தோசமாத்தான் இருக்கும். நான் யாழ்ப்பாணத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாப்பா, உம்மா, காக்கா, தம்பி, தங்கைச்சி எல்லாருமே யாழ்ப்பாணத்திலதான் பிறந்தாங்க. வாப்பாவோட வாப்பா, அவரோட வாப்பா எல்லாருமே யாழ்ப்பாணத்தில் தான் பிறந்து வளந்தாங்க.
நான் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் படித்தேன். அந்த நாளையில இருந்த யாழ்ப்பாணமே வேறு. அப்போது முஸ்லிம்கள் இல்லாத யாழ்ப்பாண வாழ்க்கை கிடையாது. நகை செய்வதாக இருந்தாலும் சரி, பாத்திரங்களைச் சீர்ப்படுத்திறதாக இருந்தாலும் சரி, புடவைகளை வாங்கிறதாக இருந்தாலும் சரி, வீட்டுப் பொருட்களை வாங்கிறதாக இருந்தாலும் சரி, அம்மி ஆட்டுக்கல் கொத்திறதாக இருந்தாலும் சரி எல்லாத்துக்கும் முஸ்லிம்கள்தான் தேவையாக இருந்தது.
நல்ல மதிப்பாக முஸ்லிம்கள் இருந்தாங்க. நல்ல அன்பாக தமிழர்களும் மதிச்சாங்க. அப்ப தமிழ் முஸ்லிம் என்ற பேதமெல்லாம் கிடையாது. நான் ஒரு போதுமே என்னை ஒரு முஸ்லிமாக உணர்ந்ததேயில்லை. ஆனா பள்ளிக்குப் போவோம். தொழுகை செய்வோம். அதெல்லாம் வேற. ஆனா, சந்தையில, கடைத்தெருவில, கூட்டாளிகள் வட்டத்தில எல்லாம் நாங்க எல்லாருமே ஒண்ணுதான்.
எனக்கு எவ்வளவோ நண்பர்கள் தமிழர்கள்தான். தருமலிங்கம், சின்னையா, அருமைத்துரை, குலநாயகம், எட்வேட், பொன்னம்பலம், காந்தராசா, துரை, சாமிநாதன், யோசேவ்… எண்டு ஏராளம் கூட்டாளிகள் இருந்தாங்க.
இப்ப நான் வந்து அவங்களைத் தேடினால் ஆட்களைப் பிடிக்கவே முடியவில்லை. சிலர் இறந்து விட்டார்கள். சில ஆட்கள் வெளிநாடுகளுக்குப் போயிட்டாங்க. சிலபேர் எங்கேயென்றே தெரியாது. குமாரத்தம்பி என்றவரை மட்டும் பார்த்தேன்.
நான் வந்தது அவசரமான பயணம். வியாபாரத்துக்காக வந்திருக்கிறோம். நடமாடும் வியாபாரம். பொருட்களை வைப்பதற்கும் எடுப்பதற்கும் பாதுகாப்பில்லாத சூழல். அதற்குள்தான் வீடு, காணி எல்லாத்தையும் போய்ப்பாத்தது.
பாருங்க, என்னோட இடத்திலேயே நான் இப்படி ஆயிருக்கன். ஆனாjaffna_town இப்ப நான் இதுக்கெல்லாம் கவலைப்படல்லை. காலம் மாறியிருக்கில்ல. நான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறன். ஆனா, இதுக்குள்ள நாம என்னத்தை எல்லாம் செஞ்சிருக்கம். அதுதான் முக்கியம். எவ்வளவு இழப்புகள்? எவ்வளவு சோகங்கள்? எவ்வளவு அலைச்சல்கள்? இதெல்லாம் யாருக்கு? சிங்கள ஆட்களுக்கா? இல்லையே? தமிழாட்களும் முஸ்லிங்களும் அடிபட்டா கொண்டாட்டம் யாருக்கு சொல்லுங்க?
நாம மற்றவங்களுக்கு வெற்றி வாய்ப்பைக் குடுத்திருக்கிறம். முந்தி யாழ்ப்பாணத்தில துணை மேயராக எல்லாம் முஸ்லிம்கள் இருந்திருக்கிறாங்க. பெரிய படிப்பாளிகளாக, நீதிவானாகக்கூட இருந்திருக்கிறாங்க.
ஆ, யாழ்ப்பாணத்தைப் பத்திக் கேட்டீங்க. யாழ்ப்பாணம் நல்லாத்தான் இருக்கு. ஆனா முந்திய மாதிரி இல்லை. இன்னும் அது மாறணும். அது வளராமல் அப்பிடியே இருக்கு. புத்தளத்துக்கு நாங்க போனபோது அங்கே அவ்வளவு பெரிய ரவுண் கிடையாது. ஆனா, இப்ப புத்தளத்தப் பாத்தீங்கன்னா, நீங்களே ஆச்சரியப்படுறம்.
மரம் வளருறமாதிரி கிசிகிசி எண்டு வளந்திருக்கு. ஆனா, யாழ்ப்பாணம் அப்பிடியில்ல. நாங்க போனப்பறம் இருந்த மாதிரியே இருக்கு. வளரேல்ல. எல்லா இடமும் பெரிசா ஆகிருக்கு, நம்ம இடம் மட்டும் இப்பிடியே இருந்தா மனசு தாங்குமா? ஆனா, இப்ப நிலைமை கொஞ்சம் பரவாயில்ல.
நான் யாழ்ப்பாணத்து ஆள்தான். யாழ்ப்பாணத்துக்கு வரலாம் எண்டவுடனே வந்தேன். ஆனா வீடில்லை. காணி எல்லாம் பழுதாகிட்டுது. திருத்தணும். அதுக்குப் பணம் வேணும். இப்ப யாழ்ப்பாணத்துக்கு வந்து வியாபாரம் பண்ணுறன். புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கிறன். ஆனா இங்க தங்க முடியாது. வீட்டைத்திருத்தணும். அதுக்குப் பிறகுதான் இங்க வரலாம். அதிலயும் பிரச்சினை இருக்கு…
  • 2. ஏன்? மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் நீங்கள் இணைந்து கொள்ளவில்லையா? வீட்டைத்திருத்திக் கொள்ளலாம். இப்போது அதற்கான உதவிகளைச் செய்கிறார்களே!osmaniya-college
முன்னாடி எண்டால் வந்திருக்கலாம். பத்து இருபது வருசத்துக்கு முந்தி எண்டால். இப்ப பிள்ளைகள் வளந்திருக்காங்க. நாங்க யாழ்ப்பாணத்தை விட்டுப் போகும்போது மூத்த மகனுக்கு எட்டு வயது. மற்றவனுக்கு ஆறு. அடுத்தது மகள். கைப்பிள்ளையாக் கொண்டு போனம். கடைசி புத்தளத்தில் பிறந்தான்.
எல்லாருமே புத்தளத்தில்தான் வளந்தாங்க. அவங்களுக்கு யாழ்ப்பாணம் தெரியாது. பெரிய ஆளுக்கு மட்டும் கொஞ்சம் தெரியும். அவனுக்கு ஊருக்கு வர கொஞ்சம் விருப்பம். ஆனா, அவன்ர கூட்டாளிகள் அங்க – புத்தளத்தில். மற்றவங்களுக்கும் அப்படித்தான். அங்க இருக்கத்தான் அவங்களுக்கு விருப்பம். இப்ப யாருக்குமே யாழ்ப்பாணத்துக்கு வர இஸ்ரமில்லை.
இப்ப பாருங்க என்னட நிலைமையை. நான் ஊருக்கு வர விரும்பினாலும் பிள்ளைங்களுக்கு விருப்பமில்லை. நான் மட்டும் எப்பிடி இந்த வயசான காலத்தில வந்திட முடியும்? என் பெண்டாட்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கு வரவும் இங்கேயே கடைசிக்காலத்தைப் போக்கவும் விருப்பம். ஆனா முடியுமா?
வீட்டைத்திருத்த வேணும் எண்டு புள்ளைகளிடம் சொல்லியிருக்கிறன். அதுக்குச் சம்மதம் சொல்லிருக்கிறாங்க. இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிற வீட்டையும் காணியையும் காட்டினன்.
வீடு இடிஞ்சு போயிட்டுது. பதிவு செய்ய வேணும். ஆனா, இங்க வந்த எங்க சொந்தக் காரங்களுக்கே இன்னும் ஏராளம் பிரச்சினைகள் இருக்கு. அதைப் பாத்தா பிள்ளைகளுக்கு வேறமாதிரி எண்ணங்கள்தான் வருது.
  • 3. மீளக்குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்களின் நிலைமை எப்பிடியிருக்கு?
நீங்க முஸ்லிம் தெருவுக்குப் போனா அதைப் பாக்கலாம். இப்படியா முந்தி முஸ்லிம்கள் இருந்தாங்க. என்னமாதிரி இருந்த ஊர். எல்லாமே இடிஞ்சு பாழாய்ப் போயிட்டுது. பாழடைஞ்ச தெருவில நடக்கவே துக்கமாக இருக்கு. சனங்கள் தங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்க. சிலபேர் கொஞ்சம் கொஞ்சமா வீட்டைத்திருத்திட்டாங்க. மத்த வீடெல்லாமே பழுதாத்தான் இருக்கு. இந்த மக்கள்ட பிரச்சினையை சுபியான் பாக்கிறார். சுபியான்தான் யாழ்ப்பாண முஸ்லிம்களின்ர தலைவரா இருக்கிறார். மத்தவங்க இங்க வாறதில்லை. அரசாங்கத்தின்ர உதவி போதாது. பழையமாதிரி எங்கட இடத்தை திருத்தி எடுக்கிறதுக்கு ஏராளம் பணம்வேணும். இந்தியா உதவிற மாதிரி முஸ்லிம் நாடுகளும் உதவணும். ஆனா, அதுக்கு அதைப்பத்தி யார் யோசிக்கிறாங்க. தமிழாக்கள்தான் இப்ப நாங்க நடத்திய கடைகளை எல்லாம் நடத்துறாங்க. சில கடைகள் மட்டும் முஸ்லிம்களுக்குத் திரும்பக் கிடைச்சிருக்கு. கஸ்தூரியார் வீதியில ஒரு நகைக்கடையும் இப்ப முஸ்லிம்களுக்கில்லை. முந்தி ஏராளம் கடைகள் இருந்தன.
இந்த மாதிரி நடமாடும் வியாபாரத்தை எல்லாராலும் செய்ய முடியமா? அல்லது எப்பவும் இப்படிச் செய்ய முடியமா? நான் கூட ஒரு வேசம் போட்டுத்தான் இந்த வியாபாரத்துக்காக வந்திருக்கிறன். இப்பிடி யாவாரம் பண்ணிறதுக்கு புள்ளைகளுக்கோ மருமகனுக்கோ விருப்பம் கிடையாது.நான் யாழ்ப்பாணம் வாறதுக்காக இந்த வியாபாரத்தை ஏத்துக்கிட்டன். அவ்வளவுதான். தமிழர்களும் முஸ்லிம்களும் நிச்சயமா நல்லமாதிரி ஒத்துமையா வாழலாம். அப்படி வாழவேணும். யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு நிறைய உதவவேணும். அதுக்குத் தமிழாக்களும் ஒத்துழைக்க வேணும்.
  • 4. புத்தளத்தில் இப்போதும் நீங்கள் முகாம்களில்தான் இருக்கிறீங்களா?
இல்லை. நாங்க இப்ப சொந்தமா காணி வாங்கி, வீடு கட்டியிருக்கிறம். ஏராளமானவங்க இப்படி காணி வீடு எல்லாத்தோடும் இருக்கிறாங்க. இதுதான் பிரச்சினையே. அங்கேயே தொழிலையும் புடிச்சிட்டாங்க. இப்ப எல்லாருமே புத்தளம் ஆட்களாகீட்டாங்க. மூத்த ஆட்களுக்குத்தான் யாழ்ப்பாணத்துக்கு வாறதுக்கு எண்ணமிருக்கு. புள்ளைகளுக்கு அதெல்லாம் கிடையாது. அவங்க புத்தளத்தோட ஐக்கியமாகீட்டாங்க. ஆனா, அங்க கொஞ்ச ஆட்கள் இன்னம் காம்பிலதான் இருக்கிறாங்க. அவங்க குறைவான எண்ணிக்கை. அவங்களுக்கும் தொழில் அங்கதான். யாழ்ப்பாணத்தில நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தா வந்திடுவாங்க. அப்பிடி வந்து இருந்து பழகீட்டா பிறகு இங்கேயே இருந்திடுவாங்க.
  • 5. உங்களைப் பொறுத்தவரையில் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய கவலைகள், அபிப்பிராயங்கள், கோபங்கள் எல்லாம் எப்பிடியிருக்கு?
யார் மீது யார் கோவிக்கிறது. இப்ப தராசு எந்தப் பக்கம் நிக்குது? அதjaffna muslimான் முன்னமே சொன்னேனே நாம் அடிபட்டு எதிராளிக்கு வெற்றியைக் குடுத்திருக்கிறம் எண்டு. பழசையெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியுமா? அதையே பேசிக்கொண்டிருந்தால், நாம உருப்படவே மாட்டோம். எனக்குக் கூட சின்ன வயசில எங்க வாப்பா, அவங்கட வாப்பா எல்லாம் சில கதைகளைச் சொல்லியிருக்கிறாங்க. முந்தி நாம நல்லூர்ப்பக்கம்தான் இருந்தம். பிறகு எங்கள வெட்டி விரட்டிப் போட்டங்க. அதாலதான் வந்து இந்தப் பக்கமா – இப்ப இருக்கிற சோனகக் குடிப்பக்கமாக இருக்கிறம் எண்டு.  இதுக்குப் போய் இப்ப சண்டை போட முடியுமா? பழசை வைச்ச பழி வாங்கவும் சண்டை போடவும் முடியுமா? பழிதான் வளரும். புழி வளர்ந்தால் என்ன நடக்கும். அழிவு. அதானே நடந்தது. மனிசனுக்கு மன்னிக்கிற மனம் வேணும். மன்னிப்பு எண்டிறது ஏமாளியாகிறது எண்டில்ல. மன்னித்தாத்தான் மறக்கிற மனம் வரும். மறதி ஏமாளியாகிறதில்லை. மறதி இல்லை எண்டால் எப்பவும் இரத்தம்தான் பாயும். இதுவரை பாய்ஞ்ச ரத்தம் போதாதா? நாங்க யாழ்ப்பாணத்த விட்டுப் போனபோது இருந்த கோவம் இப்ப இல்லை. அந்தக் கோவத்தை பிள்ளைகளுக்கும் கொடுத்தா என்னாகும்? நாம எப்ப ஒற்றுமையா இருக்கிறது?
இனி என்ன செய்யப்போறம்? எண்டு யோசிக்கவே விரும்பிறன். முதல்ல நாங்க யாழ்ப்பாணத்துக்கு வரணுமா? வந்து இருக்கணுமா? எண்டு பாக்கணும். யுhழ்ப்பாணத்துக்கு வாறதுக்காக ஏதோ அடிமை மாதிரி எல்லாத்துக்கும் பயந்து கொண்டு நான் இதைப் பேசல்ல. நியாயமா என்ன செய்யணும் எண்டு யோசிச்சுத்தான் பேசறன். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாழ்ப்பாணத்து மக்கள். நாங்க யாழ்ப்பாணத்துக்கு வாறதும் யாழ்ப்பாணத்தில இருக்கிறதும் எப்படி எண்டு நாங்க யோசிக்கிறம்.
அந்த நேரம் நாங்க யாழ்ப்பாணத்தில இருந்த வெளியேற்றப்பட்டபோது எங்களுக்காக குரல் குடுத்த மற்ற இடத்து முஸ்லிம்களை நாங்க மறக்கயில்லை. ஆனா, இப்ப நாங்க இங்க வாறத அவங்க ஆதரிக்கணும்.
  • 6. யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு உங்களுக்கு விருப்பம். பிள்ளைகளோ புத்தளத்தில் வாழத்தான் விரும்புகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வைக் காணலாம் என்று நினைக்கிறீங்கள்?
உண்மையாக எனக்கு இப்பத்தான் துக்கம். யாழ்ப்பாணத்தை விட்டுப்போகும்போது இருந்த துக்கத்தை விட இப்ப, யாழ்ப்பாணத்துக்கு வரக் கூடிய நிலைமை இருந்தும் வரமுடியல்ல. இதுதான் பெரீய கொடுமை. பாத்தீங்களா வாழ்க்கையை? இதுதான் மனிசனுக்கு தீராத கொடுமை என்கிறது. எல்லாத்தையும் அல்லா விளையாட்டாப் பாக்கிறாரா என்று கூட யோசிப்பேன். இதில யாரைக் கோவிக்கணும். நீங்க பாக்காம விட்ட பழைய சிவாஜி படத்தை இப்ப பாக்க விரும்புறீங்க. ஆனா புள்ளைகளுக்கு விஜய் படமோ அஜித் படமோதான் புடிக்குது. உங்களால என்ன பண்ணமுடியும்? ஒரு தீர்வையும் காண முடியாம துக்கத்தோட வாழவேண்டியதான். புள்ளங்க யாழ்ப்பாணத்தில பிஸினஸைப் புடிச்சி, இங்க இருக்கிற நம்மட காணியை திருத்தணும், வீட்டைக் கட்டணும் எண்டாத்தன் எல்லாம். அந்த எண்ணத்தோடதான் இந்த வியாபாரத்தை இஞ்ச மாத்தியிருக்கன். ஆனா, புள்ளகளுக்கு புத்தளத்தில் வியாபாரத்தைப் பலமாக்கத்தான் விருப்பம். இதில யார் வெற்றியடையிறது எண்டு தெரியேல்ல.
  • 7. மீள் குடியேறிய முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் எப்படியிருக்கிறார்கள்?
இப்பதானே வந்திருக்கிறார்கள். வந்த ஆட்கள் காணிப்பிரச்சினை எண்டு அங்கும் இங்குமாக அலைஞ்சு திரியிறாங்க. சிலபேர் உண்மையிலேயே அந்த நேரங்களில காணியை வித்துப் போட்டாங்க. வன்னியில சமாதானம் நடந்த காலத்தில இந்த மாதிரி காணியை வித்த ஆட்கள் இருக்கு. சிலபேருடைய காணியை வேற ஆட்களும் விடுதலைப் புலிகளும் பிடிச்சி வைச்சிருந்திருக்கிறாங்க. இப்ப அங்க காணிப்பிரச்சினை பெரிய பிரச்சினையா இருக்கெண்டு சொல்லிறாங்க. ஆனா இதைப்பத்தி முழுமையா எனக்குத் தெரியாது. யுhழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை காணிப்பிரச்சினை பெரிசா இல்லை. ஆனா கடைகளை எடுக்கிறது பிரச்சினை. பழைய உடன்படிக்கை எல்லாம் சரியா இல்லை. ஆட்கள் மாறீட்டாங்க. நிலைமை மாறீட்டுது. பாதிப்புத்தான். நடந்தது பெரிய போர். பெரிய பெரிய காரியங்கள். நாம கடடுப்படுத்த முடியாத சங்கதிகள். எப்பவும் மனிசன் எதையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலைமைக்குப் போறானோ அப்பவே இந்த மாதிரி துன்பங்கள்தான் கிடைக்கும். நமக்குக் கிடைச்சது அப்பிடிப்பட்ட துன்பந்தான்.
  • 8. இருந்தாலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்யலாம் என்று கருதுறீங்கள்? அரசாங்கமோ பிற தரப்பினரோ இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு எவ்வாறு முயற்சிக்கலாம்?
அதுக்கு வழியிருக்கு. வழியில்லாமல் எதுதான் இருக்கு? முதல்ல இந்தப் பிரச்சினையை யார் பாக்கிறாங்க. அப்பிடி யாராவது பாத்தாத்தான் ஏதாவது செய்யலாம். யாரிட்டயாவது எதையாவது கேட்கலாம். யாழ்ப்பாணத்தில முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எப்பிடி இருக்கிறார்கள் என்று யாராவது பார்க்கிறார்களா? பத்திரிகைகளில் எங்களைப்பத்தி என்ன செய்திகள் எழுதுகிறார்கள்? வருசம் வருசம் கூட்டம் போடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாள் என்று சொல்கிறார்கள். அட முஸ்லிம்களை மீண்டும் நல்லமாதிரிக் குடியேற வைக்கணும் எண்டு யாராவது சிந்திக்கிறாங்களா?அல்லது தமிழாக்களைத்தான் குடியேத்திறதப்பற்றி ஏதாவது உருப்படியாகப் பேசிறாங்களா? நாம மெல்ல மெல்ல எங்கள் காரியங்கள எங்கட மூளைக்கும் யோசினைக்கும் எட்டிய மாதிரிச் செய்ய வேண்டியதுதான். அரசாங்கமாவது கட்சிக்காரங்களாவது மண்ணாங்கட்டி….
  • 9. புத்தளத்தில் எவ்வளவு யாழ்ப்பாண முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?
அந்தக் கணக்கை என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஆனா 75 ஆயிரத்துக்கு மேல எண்டு சொல்ல முடியும். அவங்களுக்கு புத்தளத்தில் காணி வீடு தொழில் எல்லாம் இருக்கு. அவர்கள் இப்போது புத்தளம் வாசிகளைப் போலவே மாறிவிட்டார்கள்.
இந்தா என்னைப் போல இந்த வயதிலயும் யாழ்ப்பாணத்துக்கு – நான் பிறந்த மண்ணுக்கு, ஓடியாடி விளையாடிய மண்ணுக்கு மறுபடியும் வரவேணம் என்ற தவிப்போட கொஞ்சப்பேர் இருக்கிறாங்க. மற்றப்படி அரைவாசிப் பேர் புத்தளத்தில்தான் இருப்பாங்க என்று படுது. மிச்ச ஆட்கள் மெல்ல மெல்ல யாழப்பாணத்துக்கு வருவாங்க. யாழ்ப்பாணமும் கொஞ்ச பெரிசா வளந்திட்டா அவங்களும் வந்திடுவாங்க. முக்கியமாக யாழ்ப்பாணத்தில முஸ்லிம்பகுதிகளில எந்த வசதியும் இல்லையல்லவா? அதாலதான் எல்லாரும் பின்னடிக்கிறாங்க. இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிற – மீளக் குடியேறியிருக்கிற முஸ்லிம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்தால் நிலைமை கொஞ்சம் மாறும். வேகமா அங்க இருந்து ஆட்கள் வருவாங்க. நானும் அதைத்தான் எதிர்பாக்கிறன். அந்த நாள் வருமா? அதை யார் கொண்டு வாறது? ஆல்லாவுக்குத்தான் வெளிச்சம். ஆனா எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு. இப்ப நாம யாழ்ப்பாணம் வரமுடிஞ்சிருக்கிற மாதிரி அதுவும் வரும்.
கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை.
நன்றி: நாலுபக்கம்
கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன்

www.kattankudi.info/2012/06/12/கண்ணீர்-விட்ட-எவரும்-கைவ/(Add By Kirishanthraj)

No comments:

Post a Comment